Tuesday, March 30, 2010


ஞாபகத்திலிருந்து விலகுபவர்கள்

நினைவிலிருந்த காதலி
படிமமாய் அலைந்து கொண்டிருக்கிறாள்
புதிய அன்பினை சேகரித்துக்கொண்டு
உனக்கென காத்திருக்கிறேன்
சிறு புன்னகையுடன் தாமதத்திற்கான
மன்னிப்பை கோருகிறாய்
உன் இடுக்குகளில் படிந்த ஈரம்
மெல்லிய வாசனை கிளப்பியும்
பின்புறம் மார்புகள் உரசி
நீ உட்காரும்போழுது
நமது இருசக்கரவாகனம்
வேகத்தை கூட்டுகிறது
நாம் நுழைய இருப்பது
சின்ன சின்ன அறைகளென
வளர்ந்திருக்கும்
சவுக்குமரகாடுகளுக்குள்
கடலின் உப்பு தென்றலாய்
நம் முகத்தில் படிந்ததும்
புலன் படுத்தும் வெளிச்சத்தின் கீழ்
உதிர்ந்த சவுக்கிலைகள் சப்தமிட
உடல் வளைந்து
முத்தமிடும் பொழுது
கொஞ்சம் கடலை சுவைத்து விட்டதாய்
நீ உதிர்த்த சொல் ஒலிக்கிறது
நெருப்பில் சுட்ட பனிக்கட்டிபோல்
ஆடைகளை மறையச் செய்கிறேன்
நினைவிலிருந்த காதலன்
ஒருவனை காட்சிபடுத்தியும்
அவன் புணர்ச்சியின் ஸ்பரிசங்களை
மீட்டெடுப்பதாய் நீ
என்னை இறுக்கும் பொழுது
பெண்ணின் மிச்சமே ஆணென
சர்ப்பமாய் நீள்கிறேன்
விட்டில்கள் ரீங்கரிக்கின்றன
மொழிகளுக்குள் புதையுண்ட
பழம் சொற்களால் எனை அடுக்கியும்
நேர்த்தியான புருவத்தை
எவனிடத்திலும் கண்டதில்லையென
முகத்தில் ஈரம் வரைகிறாய்
குளிர்ந்த ஏரியென என் விரல்கள்
நீ பார்த்திராத உன் பின்புற அழகில்
மெல்ல நீந்தும் பொழுதும்
பெருங்கடலென நீ அசையும் பொழுதும்
உனது காதலர்களும்
எனது காதலிகளும்
மெல்ல ஞாபகத்திலிருந்து விலகுகிறார்கள்
உப்புக் காற்றில் சவுக்கு மரங்கள்
ஒன்றையொன்று
முத்தமிட்டு கொள்கின்றன .

Thursday, March 25, 2010

முத்தமிடும் வியாபாரிகள்

பூச்சிபல்தெரிய
புன்னகைக்கும் குழந்தைகளை
காணும் பொழுது
அச்சமாக இருக்கிறது
பரந்த அங்காடியினுள் நுழையும் போது
குட்டி சிங்கங்களை கொஞ்சும் குழந்தைகள்
பல்வேறு பொருட்களை
எளிதில் அடையாளப்படுத்த
நமது அண்ணாச்சி
இலவசங்களோடு புதிய பொருட்களை
அறிமுகப்படுத்திகிறார்
வியக்கவும் சலிக்கவும் செய்யும்
குழந்தைகளை பின் தொடர்கிறோம்
ரோசி மிஸ் நாய் குட்டிக்காக
கவலையடையும் சிறுவன்
மறைத்த புகையிலை நெடியை
எளிதில் கண்டுபிடித்து
நாம் திடுக்கிடும் பொழுது
சில நாணயங்களை அபகரிப்பான்
நீண்ட கூந்தலுக்கு தாயிடம்
கோபித்துக்கொள்ளும் சிறுமிக்கு முத்தமிட
அவள் உடல் நெளிந்து ஓடிவிடுகிறாள்
மேலும்
சந்தையில் சரக்குகள் பெருகும் பொழுது
குழந்தைகளிடமே
அதிகம் ஒப்படைக்கப்படுகின்றன
அதற்கிடையில்
ஒரு சிறுமியும் சிறுவனும்
முத்தமிடுவதை பார்த்தேன்

Wednesday, March 24, 2010

சுலபமான ஏமாற்றம்

உங்களை
மிகச் சுலபமாக
மிக நேர்த்தியாக
என்னால் ஏமாற்றிவிட முடியும்
அதுவும் உங்கள் கண்கள்
திறந்திருக்கும் சமயத்தில்
அல்லது
கண் இமைக்கும் நேரத்திற்குள்
ஏமாற்றி விடமுடியும்
நீங்கள் புத்திசாலியாக
மெத்த படித்தவராக
அறிவு ஜீவிகளாக
அனுபவமிக்க கிழவனாக
யாராகவும் இருக்கலாம்
ஏமாந்தும்
ஏமாற்றும் கடவுளை
நீங்கள் வெகுகாலம் நன்கு அறிவீர்கள்
மேலும்
ஒரு ஏமாறும் வாசகரையும்
நான் அறிவேன்
ஒரு கடவுள்
ஒரு புத்திசாலி
ஒரு கிழவன்
கண் இமைக்கும் நேரம்
அல்லது ஒரு வாசகன்
மிகச்சுலபமான ஒரு ஏமாற்றம்
நல்லது
நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள்
இப்பொழுது
கடவுளின் கண்கள் இமைக்காதிருப்பதை
அந்த வாசகனிடம் மட்டுமே
கேட்கமுடியும்
அதுதான் மிகச் சுலபமானது

Tuesday, March 16, 2010

கோடை காலம்



நீண்ட நாட்களுக்கு பிறகு
அவள் இல்லாத நாளில்
உன்னை சந்திக்கிறேன்
எரிந்து போன காயங்களை காட்டி
எல்லைகள் வரவேற்கின்றன
எங்கே அந்த புல்வெளிகள்
அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள்
உன் அடர்ந்த மரங்களின் இலைகளை காணவில்லை
இப்பொழுது என் பசிக்கு
உன்னிடம் பழங்கள் இல்லை
நீரோடையில் நான் தொலைத்த நாணயத்தை
வெயில் மினுங்க
கண்டெடுத்துவிடுவது ஆச்சரியம்தான்
என் பெயர் பொறித்த தடிமரவட்டை
உதிர்ந்து விழுகிறது என்னோடு
மலர்கள் அற்று நிர்வாணம்
கொண்டிருக்கிறது காப்பிசரிவுகள்
காதலிக்கு கொடுக்க ஒரு காட்டு மலரும்
இல்லாதது எவ்வளவு துக்ககரமானது
இரை தேடிச் சென்ற பட்சிகள்
தொலைந்து போய் விட்டதாய்
இருக்கிறது உன் மௌனம்
இருப்பினும் பச்சை கூம்புகள் கொண்ட
சோற்று கற்றாழைகள்
வளர்ந்திருப்பது நல்ல விசயம்தான்
துயரம் பெருகும் கோடைகாலத்தில்
நான் இங்கு வந்திருக்ககூடாததுதான்
அறிதல் நிரந்தரம்




துப்பாக்கியில் இருந்து விடுபட்ட
குண்டின் வேகம் போல
ஒரே நொடியில் மரணம் ஏற்படுவதை
என்னால் ஒத்துக் கொள்ள முடியாது
ஆகாயத்தில் பருந்துகளின் நிழலை உணர்ந்து
வளையிலிருந்து வெளிவர முயலும்
எலியின் பயம் போன்றதொரு கணம்
அல்லது முதன்முறையாக இரை தேடிச்செல்லும்
சிறிய பட்சியைப் போல
ஒரு சாலையை கடக்கும் போதோ
நீந்தும் போதோ
மரணத்தை மெல்ல உணர வேண்டும்
திடுக்கிட வைக்கும் இசைப் பேரொலியின்
போது இதயம் நின்று விடுமாயின்
மரணத்தை ஏன் அறிய வேண்டும்
ஒவ்வொரு கணமும் ஏன் என்பதுதான் கேள்வி

Saturday, March 6, 2010

மிருகங்களும் கானல் நீரும்



தன் மூதாதையர்களை கொல்லப்பிறந்தவன்
என்றொரு குரல் பின் தொடர்கிறது
தன் கலவியின் போது
கல்லெறிந்ததாக சீறும் ஒரு நாயின் முன்
நான் நின்றிருந்தேன்
மந்தையில் நடக்கும் ஆடு ஒன்று
விலகி வந்து என் இடுப்பில்
தன் கொம்பால் தாக்கி சென்றது
தலைக்கு மேல் காகங்கள்
கொத்திக்கொண்டே இருக்கின்றன
ஓட முயன்ற என்னை
கானகத்தின் மிருகங்கள் ஒன்றுகூடி துரத்துகின்றன
நாயிருந்த இடத்தில்
ஒரு கொழுத்த சிங்கம் என்னை
ஏறிட்டுப்பார்த்து கொட்டாவி விட்டது
மரணம் ஒரு கணம்
கானகம் பொட்டலானது
வெட்ட வெளியில் புகைத்துக்கொண்டிருக்கிறேன்
கானல் நீர் எழும்பிக் கொண்டிருக்கிறது

நீலம் படரும் கண்கள்



ஆளுயரப் பாம்பொன்றை
மரணமடையும்வரை அடித்துக்கொன்றதிலிருந்து
வேவு பார்க்கத் தொடங்கினான்
கருநீல பாம்பொருவன்

கனி பறிக்க தோட்டத்தில் உலவும் பொழுது
ஆடைநீக்கி படுத்திருக்குமவன்
வரவிருக்கும் கனவுகளில் அலைவானென்று
உறங்கும் முன் படுக்கையை
சோதனையிடுகிறேன்

நடுசாமம் இறுதியில்
பிளவுண்ட கூரிய நாவால்
இதழ் கிழித்தும்
மெல்லிய வாலால் சூல்கொண்டு
எனதுடலை இரையென பின்னிக்கொள்கிறான்

நான் முனங்குவதை கேட்பதாயில்லை
கண்களில் சிறிது நீலத்தை படரவிட்டு
உடல் கிளர்த்தி மறைந்து போகிறான்
மேனியெங்கும் பாம்பின் செதில் கொண்டு
வால்துடித்து நெளிகிறேன்
என்னுள்லிருந்து பாம்புக்குட்டிகள்
வெளியேறுகின்றன

தோட்டத்தில் கனிகள்
நீல நிறமாய் உதிர்கிறது
சகிக்க முடியாத ஆண்


ஒரு கவிஞனுமான எனது தந்தை
சமூகம் விரும்பாதவனாகவும்
தன் சுதந்திரத்தை அடிமை படுத்தும்
பெண்களுக்கு கணவனாக இருப்பதாகவும்
தன் போதை நாட்களிடையே உளறுகிறார்
வெளியெங்கும் சொல்லாடல்களுக்கான
நபர்களை தேடிக்கொண்டிருக்குமவர்
மதுவோடு இறைச்சியையும்
காலி செய்தவாறு சில கவிதைகள்
கிடைத்த நாளில் மகிழ்வுடன் எங்களிலிருந்து
வெளியேறுகிறார்
நள்ளிரவு விடுதிகளில் கைவிட்டுச் செல்பவரை
தனது புரவலர் என அறிமுகப்படுத்தும்
அவரை புரிந்து கொண்ட பெண்ணொருத்தி
மனைவியாக கிடைக்க வழியற்று
காலம் கடந்து போய்விட்டதாய் புலம்பும் போது
யாராலும் சகிக்க முடியாது
இச்சைகளை கவிதையில் புணர்ந்து கொண்டு
ஏறக்குறைய பரிநிர்வாணமாகிவிடுகிறார்
சில சமயம் தன் கவிதைகளுக்கு சில நாணயங்களை
பரிசாக கொண்டு இருப்பிடம் திரும்பும் அவர்
நள்ளிரவில் என்னை எழுப்பி நடனமாடுவார்
தன்னை ஒரு தந்தை இல்லையென்றும்
உன் தாயின் தோழன் அல்லது காதலன் என்றும்
பொய் சொல்லுவார்
கன்றாவிதான் ஒரு கவிஞன் தந்தையாக இருப்பது