Monday, June 3, 2013

தானியம் சலிக்கும் இயந்திரம்


அதுவொரு
முல்லைப் பெரும்பொழுதின் அதிகாலை
மதுவினூடாக நடைபாதையில்
கிள்ளிச்செல்லும் சாலையோரச் செடியின்
ஒற்றையிலை நிறமிழக்கத் தொடங்குகிறது
வரலாற்றிலிருந்து பெண்களை
தவறவிட்ட நாம்தான் சிலசமயம்
மொழிகளுக்குள் புதையுண்ட
பழஞ்சொற்களை தேடுபவராகவும் இருக்கிறோம்
ஐந்து நிலங்களோடு அதன் அற்புதங்களையும்
புணர்சியினூடாக அவளிடம்
அதீத  முத்தங்களையும் நிகழ்த்தும் பொழுது 
தானியம் சலிக்கும் இயந்திரமென
ஒவ்வொரு புனரச்சிகளையும்
சலித்துக்கொண்டிருந்தாள்
இப்படித்தான்
வெண்ணீர் ஊற்றுகளுக்கிடையே
ஆரோக்கியமாக வளரும்
பசும்நீலப் பாசிகளைக் கண்டு
ஞானமுற்றவனாய் வாழ்வின் இயல்பை
அர்த்தப்படுத்தினோம் நாம்
கடைசியாக
ஒருமுறையும் கூடாத இவ்விரவில்
நிறமிழந்த இலையென திரியும் நாம்
எத்தனையாவது புத்தர்கள் நண்பா



Saturday, February 12, 2011



பொறுப்பற்ற குடும்பம்


நான்குவழிச் சாலையில்
அநேகம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்
எனது ஆகச்சிறந்த
நண்பனென சொல்லிக்கொண்டலையும் தந்தையை
அம்மா ஓயாது தேடுகிறாள்
என்னை ரகசியமாகவும்
தந்தையை பகிரங்கமாகவும்
காதலிக்கத் தெரிந்தும் வைத்திருந்தாள் அவள்
நானோ
நெடுநாளைய தோழியொருத்தியின்
கோபத்திற்கு ஆளானதை
எனதறையின் வானத்தில் பரப்பியிருந்தேன்
ருபாய் தாள்களின் மதிப்பு அறியாத
அம்மாவிடம் சில கவிதைகளை
திருடிகொண்டிருக்கும் தந்தையுடன்
பொறுப்பற்று திரியும் நானும்
நான்கு வழிச்சாலையில் அரளிகள்
கொலைகளையும் செய்து விடுகிறதெனக் கூறி
அதன் மலர்களைப் பறிக்கும்
இளம்பெண்ணை ரசித்தவாறு
ஏதோ நண்பர்களைப்போல புகைத்துக்கொண்டிருந்தோம்

(யவனிகாவுக்கு)

Monday, May 10, 2010

மணல் வீடு மு.ஹரி கிருஷ்ணன் எனது கவிதைகள்

மு. ஹரி க்ரிஷ்ணன்னைஆசிரியராக கொண்டு இருமாத இதழாக வெளிவரும் மணல் வீடு வெளிவந்திருக்கிறது.

ஏர்வாடி , குட்டப் பட்டி அஞ்சல் , மேட்டுர் வட்டம், சேலம் மாவட்டம்-636 453

என்ற முகவரியில் இத்ழ கிடைக்கும் .

மணல் வீடில் வெளிவந்த எனது கவிதை

நானும் ராகவனும்

ஒற்றைக் கண்ணுடன்

எனதறைக்குள் திடுமென நுழைந்து

என்னை காணவந்திருப்பதாக

கூறும் இளம்பெண்ணை

உடல் பதறி அமரச் சொல்கிறேன்

அவளது முகத்தில் லேசான அரும்புகள் முளைவிட

இளம் பெண் கைவிட்ட துக்கம் தாளாமல்

இருபத்தியேழு மாத்திரைகள் விழுங்கி

மரணமடைந்த ராகவானாய் மாறத்தொடங்கினாள்

இறுகிய குரலில்

உனது பெயர் ராகவனா என்று கேட்கிறேன்

ஆம் என்பதும் போலிருந்தது

ஒற்றைக்கண்ணின் நெடுநேர முறைப்பு

பின் மௌனம் களைத்தவள்

ராகவானாய் பேசத்தொடங்கினாள்

தான் பதின் வயது இறுதியாண்டுகளிலே

மரணமடைந்து விட்டதால்

காமத்தை பற்றி அறிய முடியவில்லையென்றும்

காமத்தை அறிந்து கொள்வதற்காகவே

தான் இங்கு வந்திருப்பதாக கூறும்

அவளான அவ்விளம்பெண்

நேற்றுதான் பருவமடைதிருக்கிறாள்

ஒற்றைக்கண் ஏற்படுத்திய அச்சத்தினால்

கிளர்ச்சி ஏற்படுத்தும் ஸ்பரிசங்களையும்

உச்சகட்ட முயக்கங்களின் வகைமைகளையும்

நீள் விளக்கத்துடன் கற்றுத்தருகிறேன்

ஒற்றைக் கண்ணில்

காமம் கண்ணீராய் பெருகிவழிய

கதவிடுக்கில் சிகரெட் புகையாய் வெளியேறுகிறாள்

வெளியெங்கும்

மூன்று கண்களுடன் குழந்தை பிறந்திருப்பதாக

செய்தி பரவியிருந்தது .

நன்றி மணல் வீடு

Thursday, May 6, 2010

புதுஎழுத்து , மனோன்மணி , எனது கவிதைகள்


ஆசிரியர் மனோன்மணியை ஆசிரியராக கொண்டு வெளிவரும் புது எழுத்து இதழ் வெளிவந்திருக்கிறது.


3/167, ஸ்ரீராமலுநகர் , காவேரிப்பட்டினம் - 635 112.
கிருஷ்ணகிரி மாவட்டம். செல் - 98426 47101, 90421 58667
என்ற முகவரியில் இதழ் கிடைக்கும்


புது எழுத்தில் வெளிவந்திருக்கும் எனது ஐந்து கவிதைகள்


1. சாம்பல் மணம்

புகையிலை துண்டில்

உயிர்

ரகசியமாயிருந்தது

மேனியெங்கும்

சாம்பலின்

மணம்

புகையிலை துண்டிலும்

மாமிச கவுச்சி

உலர்ந்து காரமேறிய

புகையிலை சுருள்தான்

இவ்வுடல்

பிறகு ஏன்
பனிக் காலத்தில் வாயிலிருந்து
புகை வருகிறது .



2.காதலியான சத்யா
ஒரு மதியப் பேருந்தில்
காதலியான சத்யா
தோள்சாய்ந்து உறங்குகிறாள்
அவளது கோதுமை மயிர்கள்
முகத்தில் சித்திரமென படர்கிறது
நெரிசலடையும் பேருந்து
ஒரு அண்டரண்ட பட்சிபோல்
உடல் வளைந்து செல்ல
அவளது இதழோரம் கசியும்
ஈரத்தை
நான் மட்டுமே அறிவேன்
கூடவே
அதன் மணம்
என் தாயின் தனப்பாலை
நினைவுபடுத்த
நெற்றியில் முத்தமிடுகிறேன்
எவ்வித உணர்வுகளுமற்ற
அவளையொரு நிறுத்தத்தில்
காலம் இறக்கிவிட மதியமும் இறங்கிவிட்டது
ஏழுகடல் தாண்டி ஏழு மலைகளுக்கப்பால்
காதலற்ற ஓர் மறைவிடத்தில்
பூமி பிளந்து செல்கிறது பேருந்து


3. பூமிக்கும் நிலவுக்குமான ஈர்ப்பு

இருள் பரவுகிறது
கிழட்டு மயிர்களை விரியத் தொடங்கும்
நிலவினை கரிய மேகங்களால் மறைத்து
பெய்யத் தொடங்கும் மழை
நேசங்களையும் பிரியமானவர் களையும்
இழந்துவிட்டதாக
நீண்ட காலத்தில் இருக்கிறது மணம்
உடல் சிலிர்த்து தவ்வி தவ்விச் செல்லும்
நடக்கவியலா குருவிகளுடன்
சுயம் இழந்து கைகளை விரித்து
எப்படி பின் தொடர்வது
தூய அன்பிலிருந்து காதலையும்
குலக்கடவுளையும்
எதுக்களித்த மதுவென வெளியேற்றுகிறது குளிர்
இருமருங்கிலும் சாலையை
நீர் அரித்து செல்ல மரங்கள்
நுனி கிளையில் துளிர் விடுகின்றன
பூமிக்கும் நிலவுக்கும்மானதொரு ஈர்ப்பை
ஓயாது கடலலைகள் உணர்த்துவது போல்
தொடர்ந்துவிடும் வெளிகளின் மீதான
ஈர்ப்பை காதலை
ஒரு கவிதையில் மெல்ல
அருவருப்படைய செய்யும்
அதிகாரத்தின் கீழாகிறது வாழ்நாட்கள்
குருவிகளின் கீச்சொலி செல்போனில் சிணுங்க
திடுக்கிட்டு தேடியலையும் என்னை
ஓர் முனையில் சந்திக்க நேரிடுமானால்
கூர் கத்திபோல் தொண்டையை கிழிக்கும்
நாட்டு மதுவை பகிர்ந்தளித்தால்
இம்மன் கோப்பையில் ஒருவேளை
அன்பு நிரம்ப கூடும்.



4.உனக்கென ஒரு பாதி மது


நீலம் பொங்கி நுரைக்கும்
கடற்கரை மணல் வீடுகளில்
நூற்றாண்டு கால ஒயினை பகிர்ந்து
மெலிதாய் நடனமாட
மழுங்கியதுன் முலைகளை கூர் தீட்டுகிறேன்
சோம்பல் முறிக்கும்
முகத்தினை தின்னக்கொடுக்கிறாய்
வறண்ட இதழ்களில் தூண்டிளிட்டு
உனதுடல் வெப்பம்
இடுக்குகளில் வியர்வையாய் பெருகி
தளர்ந்து விடுகிறது காமம்
எனது சுயத்தின்
முகமூடிகளை எளிதாய் கழற்றி விடுகிறாய்
ஒரு நாடோடியாய்
வழியெங்கும்
துக்கங்களை சுமந்தலைபவனுக்கு
தைரியம் அன்பே
காதலியின் மீது வன்முறையாய்
அன்பு செலுத்துவது பற்றி
இதோ
உனக்கென ஒரு பாதி
அந்தகாரத்தினுள் உலவுகிறது
இந்தயிரவு
நான் உனது இரை.


5. நிற்க நேரமில்லை

அந் நகரத்தின் தெற்கில்
ஒரு பத்துக்கு பத்தடி கொண்ட
அறைதான் எனது இருப்பிடம்
ஐந்தடியை உறங்குவதற்கென
எடுத்துக்கொள்ள
ஓர் அடியில் தொலைக்காட்சி பெட்டியும்
கணினிக்கென ஓர் அடியும்
மற்றொரு அடியில்
பாத்திரங்கள் காய்கறிகள்
எடுத்துக்கொள்ள
ஓர் அடி சமைப்பதற்கு
மீந்திருக்கும்
ஓர் அடியில்
நீங்கள் வெகுநேரம் நிற்கமுடியாது

நன்றி புதுஎழுத்து

Tuesday, March 30, 2010


ஞாபகத்திலிருந்து விலகுபவர்கள்

நினைவிலிருந்த காதலி
படிமமாய் அலைந்து கொண்டிருக்கிறாள்
புதிய அன்பினை சேகரித்துக்கொண்டு
உனக்கென காத்திருக்கிறேன்
சிறு புன்னகையுடன் தாமதத்திற்கான
மன்னிப்பை கோருகிறாய்
உன் இடுக்குகளில் படிந்த ஈரம்
மெல்லிய வாசனை கிளப்பியும்
பின்புறம் மார்புகள் உரசி
நீ உட்காரும்போழுது
நமது இருசக்கரவாகனம்
வேகத்தை கூட்டுகிறது
நாம் நுழைய இருப்பது
சின்ன சின்ன அறைகளென
வளர்ந்திருக்கும்
சவுக்குமரகாடுகளுக்குள்
கடலின் உப்பு தென்றலாய்
நம் முகத்தில் படிந்ததும்
புலன் படுத்தும் வெளிச்சத்தின் கீழ்
உதிர்ந்த சவுக்கிலைகள் சப்தமிட
உடல் வளைந்து
முத்தமிடும் பொழுது
கொஞ்சம் கடலை சுவைத்து விட்டதாய்
நீ உதிர்த்த சொல் ஒலிக்கிறது
நெருப்பில் சுட்ட பனிக்கட்டிபோல்
ஆடைகளை மறையச் செய்கிறேன்
நினைவிலிருந்த காதலன்
ஒருவனை காட்சிபடுத்தியும்
அவன் புணர்ச்சியின் ஸ்பரிசங்களை
மீட்டெடுப்பதாய் நீ
என்னை இறுக்கும் பொழுது
பெண்ணின் மிச்சமே ஆணென
சர்ப்பமாய் நீள்கிறேன்
விட்டில்கள் ரீங்கரிக்கின்றன
மொழிகளுக்குள் புதையுண்ட
பழம் சொற்களால் எனை அடுக்கியும்
நேர்த்தியான புருவத்தை
எவனிடத்திலும் கண்டதில்லையென
முகத்தில் ஈரம் வரைகிறாய்
குளிர்ந்த ஏரியென என் விரல்கள்
நீ பார்த்திராத உன் பின்புற அழகில்
மெல்ல நீந்தும் பொழுதும்
பெருங்கடலென நீ அசையும் பொழுதும்
உனது காதலர்களும்
எனது காதலிகளும்
மெல்ல ஞாபகத்திலிருந்து விலகுகிறார்கள்
உப்புக் காற்றில் சவுக்கு மரங்கள்
ஒன்றையொன்று
முத்தமிட்டு கொள்கின்றன .