Friday, January 29, 2010


குகை ஓவியம்

ஒரு சிற்றோடையைப் போல்
மலைச் சரிவுகளில் உலவி
குத்தீட்டியால் காட்டுப் பன்றிகளை
வேட்டையாடி அதன் தடித்த வார்களை
சூடாக்கப்பட்ட பாறையில் பரப்புகிறேன்
வண்ணத்துப்பூச்சிகளை துரத்தும் பொழுது
கச்சைகள் குலுங்குவதாய்
உரித்தெடுக்கப்பட்ட விலங்கின் தோலில்
செய்த அதை அவிழ்த்தெரிகிறாய்
உனது தானியங்கள்
முளை விட்டிருந்தது
நெய்யொழுகும் வார்களை பகிர்ந்து
சிறிய நெருப்பின் முன்
நாம் புணர்ந்து தீர்க்கவும்
உன் தளிர் மேனியை
குகைகளில் ஓவியம் தீட்டுகிறேன்
வண்ணத்தியின் நீலத்தை நிரப்புகிறாய்
வரைந்த தலையில் சிறகொன்றை செருக
பசலை கொண்டதுன் முகம்
வளரும் மூன்றாம் நாளின் நிலவு
உனது தானியங்கள்
பால் செறிந்து முற்றத்தொடங்குகிறது

No comments:

Post a Comment