ஞாபகத்திலிருந்து விலகுபவர்கள்
நினைவிலிருந்த காதலி
படிமமாய் அலைந்து கொண்டிருக்கிறாள்
புதிய அன்பினை சேகரித்துக்கொண்டு
உனக்கென காத்திருக்கிறேன்
சிறு புன்னகையுடன் தாமதத்திற்கான
மன்னிப்பை கோருகிறாய்
உன் இடுக்குகளில் படிந்த ஈரம்
மெல்லிய வாசனை கிளப்பியும்
பின்புறம் மார்புகள் உரசி
நீ உட்காரும்போழுது
நமது இருசக்கரவாகனம்
வேகத்தை கூட்டுகிறது
நாம் நுழைய இருப்பது
சின்ன சின்ன அறைகளென
வளர்ந்திருக்கும்
சவுக்குமரகாடுகளுக்குள்
கடலின் உப்பு தென்றலாய்
நம் முகத்தில் படிந்ததும்
புலன் படுத்தும் வெளிச்சத்தின் கீழ்
உதிர்ந்த சவுக்கிலைகள் சப்தமிட
உடல் வளைந்து
முத்தமிடும் பொழுது
கொஞ்சம் கடலை சுவைத்து விட்டதாய்
நீ உதிர்த்த சொல் ஒலிக்கிறது
நெருப்பில் சுட்ட பனிக்கட்டிபோல்
ஆடைகளை மறையச் செய்கிறேன்
நினைவிலிருந்த காதலன்
ஒருவனை காட்சிபடுத்தியும்
அவன் புணர்ச்சியின் ஸ்பரிசங்களை
மீட்டெடுப்பதாய் நீ
என்னை இறுக்கும் பொழுது
பெண்ணின் மிச்சமே ஆணென
சர்ப்பமாய் நீள்கிறேன்
விட்டில்கள் ரீங்கரிக்கின்றன
மொழிகளுக்குள் புதையுண்ட
பழம் சொற்களால் எனை அடுக்கியும்
நேர்த்தியான புருவத்தை
எவனிடத்திலும் கண்டதில்லையென
முகத்தில் ஈரம் வரைகிறாய்
குளிர்ந்த ஏரியென என் விரல்கள்
நீ பார்த்திராத உன் பின்புற அழகில்
மெல்ல நீந்தும் பொழுதும்
பெருங்கடலென நீ அசையும் பொழுதும்
உனது காதலர்களும்
எனது காதலிகளும்
மெல்ல ஞாபகத்திலிருந்து விலகுகிறார்கள்
உப்புக் காற்றில் சவுக்கு மரங்கள்
ஒன்றையொன்று
முத்தமிட்டு கொள்கின்றன .