Saturday, March 6, 2010
நீலம் படரும் கண்கள்
ஆளுயரப் பாம்பொன்றை
மரணமடையும்வரை அடித்துக்கொன்றதிலிருந்து
வேவு பார்க்கத் தொடங்கினான்
கருநீல பாம்பொருவன்
கனி பறிக்க தோட்டத்தில் உலவும் பொழுது
ஆடைநீக்கி படுத்திருக்குமவன்
வரவிருக்கும் கனவுகளில் அலைவானென்று
உறங்கும் முன் படுக்கையை
சோதனையிடுகிறேன்
நடுசாமம் இறுதியில்
பிளவுண்ட கூரிய நாவால்
இதழ் கிழித்தும்
மெல்லிய வாலால் சூல்கொண்டு
எனதுடலை இரையென பின்னிக்கொள்கிறான்
நான் முனங்குவதை கேட்பதாயில்லை
கண்களில் சிறிது நீலத்தை படரவிட்டு
உடல் கிளர்த்தி மறைந்து போகிறான்
மேனியெங்கும் பாம்பின் செதில் கொண்டு
வால்துடித்து நெளிகிறேன்
என்னுள்லிருந்து பாம்புக்குட்டிகள்
வெளியேறுகின்றன
தோட்டத்தில் கனிகள்
நீல நிறமாய் உதிர்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment