Saturday, February 12, 2011



பொறுப்பற்ற குடும்பம்


நான்குவழிச் சாலையில்
அநேகம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்
எனது ஆகச்சிறந்த
நண்பனென சொல்லிக்கொண்டலையும் தந்தையை
அம்மா ஓயாது தேடுகிறாள்
என்னை ரகசியமாகவும்
தந்தையை பகிரங்கமாகவும்
காதலிக்கத் தெரிந்தும் வைத்திருந்தாள் அவள்
நானோ
நெடுநாளைய தோழியொருத்தியின்
கோபத்திற்கு ஆளானதை
எனதறையின் வானத்தில் பரப்பியிருந்தேன்
ருபாய் தாள்களின் மதிப்பு அறியாத
அம்மாவிடம் சில கவிதைகளை
திருடிகொண்டிருக்கும் தந்தையுடன்
பொறுப்பற்று திரியும் நானும்
நான்கு வழிச்சாலையில் அரளிகள்
கொலைகளையும் செய்து விடுகிறதெனக் கூறி
அதன் மலர்களைப் பறிக்கும்
இளம்பெண்ணை ரசித்தவாறு
ஏதோ நண்பர்களைப்போல புகைத்துக்கொண்டிருந்தோம்

(யவனிகாவுக்கு)