புதுஎழுத்து , மனோன்மணி , எனது கவிதைகள்ஆசிரியர்
மனோன்மணியை ஆசிரியராக கொண்டு வெளிவரும்
புது எழுத்து இதழ் வெளிவந்திருக்கிறது.
3/167, ஸ்ரீராமலுநகர் , காவேரிப்பட்டினம் - 635 112.
கிருஷ்ணகிரி மாவட்டம். செல் - 98426 47101, 90421 58667
என்ற முகவரியில் இதழ் கிடைக்கும்
புது எழுத்தில் வெளிவந்திருக்கும் எனது ஐந்து கவிதைகள்
1. சாம்பல் மணம்
புகையிலை துண்டில்
உயிர்
ரகசியமாயிருந்தது
மேனியெங்கும்
சாம்பலின்
மணம்
புகையிலை துண்டிலும்
மாமிச கவுச்சி
உலர்ந்து காரமேறிய
புகையிலை சுருள்தான்
இவ்வுடல்
பிறகு ஏன்
பனிக் காலத்தில் வாயிலிருந்து
புகை வருகிறது .
2.காதலியான சத்யா ஒரு மதியப் பேருந்தில்
காதலியான சத்யா
தோள்சாய்ந்து உறங்குகிறாள்
அவளது கோதுமை மயிர்கள்
முகத்தில் சித்திரமென படர்கிறது
நெரிசலடையும் பேருந்து
ஒரு அண்டரண்ட பட்சிபோல்
உடல் வளைந்து செல்ல
அவளது இதழோரம் கசியும்
ஈரத்தை
நான் மட்டுமே அறிவேன்
கூடவே
அதன் மணம்
என் தாயின் தனப்பாலை
நினைவுபடுத்த
நெற்றியில் முத்தமிடுகிறேன்
எவ்வித உணர்வுகளுமற்ற
அவளையொரு நிறுத்தத்தில்
காலம் இறக்கிவிட மதியமும் இறங்கிவிட்டது
ஏழுகடல் தாண்டி ஏழு மலைகளுக்கப்பால்
காதலற்ற ஓர் மறைவிடத்தில்
பூமி பிளந்து செல்கிறது பேருந்து
3. பூமிக்கும் நிலவுக்குமான ஈர்ப்பு இருள் பரவுகிறது
கிழட்டு மயிர்களை விரியத் தொடங்கும்
நிலவினை கரிய மேகங்களால் மறைத்து
பெய்யத் தொடங்கும் மழை
நேசங்களையும் பிரியமானவர் களையும்
இழந்துவிட்டதாக
நீண்ட காலத்தில் இருக்கிறது மணம்
உடல் சிலிர்த்து தவ்வி தவ்விச் செல்லும்
நடக்கவியலா குருவிகளுடன்
சுயம் இழந்து கைகளை விரித்து
எப்படி பின் தொடர்வது
தூய அன்பிலிருந்து காதலையும்
குலக்கடவுளையும்
எதுக்களித்த மதுவென வெளியேற்றுகிறது குளிர்
இருமருங்கிலும் சாலையை
நீர் அரித்து செல்ல மரங்கள்
நுனி கிளையில் துளிர் விடுகின்றன
பூமிக்கும் நிலவுக்கும்மானதொரு ஈர்ப்பை
ஓயாது கடலலைகள் உணர்த்துவது போல்
தொடர்ந்துவிடும் வெளிகளின் மீதான
ஈர்ப்பை காதலை
ஒரு கவிதையில் மெல்ல
அருவருப்படைய செய்யும்
அதிகாரத்தின் கீழாகிறது வாழ்நாட்கள்
குருவிகளின் கீச்சொலி செல்போனில் சிணுங்க
திடுக்கிட்டு தேடியலையும் என்னை
ஓர் முனையில் சந்திக்க நேரிடுமானால்
கூர் கத்திபோல் தொண்டையை கிழிக்கும்
நாட்டு மதுவை பகிர்ந்தளித்தால்
இம்மன் கோப்பையில் ஒருவேளை
அன்பு நிரம்ப கூடும்.
4.உனக்கென ஒரு பாதி மது
நீலம் பொங்கி நுரைக்கும்
கடற்கரை மணல் வீடுகளில்
நூற்றாண்டு கால ஒயினை பகிர்ந்து
மெலிதாய் நடனமாட
மழுங்கியதுன் முலைகளை கூர் தீட்டுகிறேன்
சோம்பல் முறிக்கும்
முகத்தினை தின்னக்கொடுக்கிறாய்
வறண்ட இதழ்களில் தூண்டிளிட்டு
உனதுடல் வெப்பம்
இடுக்குகளில் வியர்வையாய் பெருகி
தளர்ந்து விடுகிறது காமம்
எனது சுயத்தின்
முகமூடிகளை எளிதாய் கழற்றி விடுகிறாய்
ஒரு நாடோடியாய்
வழியெங்கும்
துக்கங்களை சுமந்தலைபவனுக்கு
தைரியம் அன்பே
காதலியின் மீது வன்முறையாய்
அன்பு செலுத்துவது பற்றி
இதோ
உனக்கென ஒரு பாதி
அந்தகாரத்தினுள் உலவுகிறது
இந்தயிரவு
நான் உனது இரை.
5. நிற்க நேரமில்லை
அந் நகரத்தின் தெற்கில்
ஒரு பத்துக்கு பத்தடி கொண்ட
அறைதான் எனது இருப்பிடம்
ஐந்தடியை உறங்குவதற்கென
எடுத்துக்கொள்ள
ஓர் அடியில் தொலைக்காட்சி பெட்டியும்
கணினிக்கென ஓர் அடியும்
மற்றொரு அடியில்
பாத்திரங்கள் காய்கறிகள்
எடுத்துக்கொள்ள
ஓர் அடி சமைப்பதற்கு
மீந்திருக்கும்
ஓர் அடியில்
நீங்கள் வெகுநேரம் நிற்கமுடியாது
நன்றி புதுஎழுத்து